கந்தர பொலிஸ் பிரிவில் தன்னை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கந்தர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு பிரிவிற்கு முறைப்படாளிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி குறித்த சாட்சியாளரது வீட்டிற்கு வருகை தந்த 7 பேர் அயலவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதாக 119 பொலிஸ் துரித தொலைபேசி சேவைக்கு கிடைக்கப் பெற்ற அழைப்பிற்கமைய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் வருகை தந்த நபரொருவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் போது தான் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த குறித்த சந்தேகநபர் பொலிஸாரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய கம்புருபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் , ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

