பிரான்சில் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமான தியாக தீபம் நினைவேந்தல்!

250 0

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமாகிய இன்று 15.09.2021 புதன்கிழமை பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமாகின.ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் சுடர் ஏற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிதிப்பொறுப்பாளர் திரு.செவ்வேள் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர் நினைவுரையையும் திரு.செவ்வேள் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், தியாக தீபத்தை நினைவேந்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் எனவும் தொடர்ந்து 12 நாட்களும் தியாக தீபத்தை நினைவேந்துவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம் எனவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக 12 தினங்களும் காலை 10 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்படவுள்ளது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவுவணக்க எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)