நைஜீரியாவில் துணிகரம் – குண்டு வைத்து சிறை தகர்ப்பு

9 0

நைஜீரியாவில் வெடிகுண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 240 கைதிகளை தப்ப வைத்துள்ளனர்.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் கப்பா என்கிற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில் 224 விசாரணை கைதிகள் மற்றும் 70 குற்றவாளிகள் என மொத்தம் 294 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்த பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறைக்காவலர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் பயங்கரவாதிகள் சிறை அறைகளை உடைத்து கைதிகளைத் தப்ப வைத்தனர். இப்படி மொத்தம் 240 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடினர்.
இதுதொடர்பாக, அந்நாட்டின் உள்துறை மந்திரி ராப் அரெக்பசுலோ கூறுகையில், தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. கைதிகளை பற்றிய தகவல்களை இண்டர்போல் அமைப்பிடம் சமர்ப்பித்திருக்கிறோம். ஒருவேளை நாட்டை விட்டு அவர்கள் வெளியேறினாலும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. 2 சிறைக் காவலர்களைக் கொன்று கைதிகளை தப்பவைத்த பயங்கரவாதிகளையும் விரைவில் பிடிப்போம் என்றார்.
சிறையைத் தகர்த்து கைதிகளை தப்பவைத்த இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் தென்கிழக்கில் இமோ மாகாணத்திலுள்ள ஒரு சிறையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 1800-க்கும் அதிகமான கைதிகளை தப்பவைத்தது நினைவுகூரத்தக்கது.