மக்களுக்கு அரசு துரோகம் இழைப்பு! – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

269 0

கொரோனா பெருந்தொற்று நெருக்கடி நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்குத்  துரோகம் இழைக்கும் வகையிலான மிக மோசமான சட்டமூலங்களை தற்போதைய அரசு நிறைவேற்றி வருகின்றது.

-என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொரோனா பெருந்தொற்று நிலையால் நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தடுப்பூசி திட்டம்கூட தாமதமாகவே ஆரம்பமாகியது. தாமதித்தேனும் இந்த நடவடிக்கை ஆரம்பமானதை வரவேற்கின்றோம். ஆனால், தடுப்பூசி திட்டத்தில் இன்றளவிலும் குளறுபடி தொடர்கின்றது. இதனால்தான் விசேட வைத்தியர் ஒருவர்கூட தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகியுள்ளார்.

தடுப்பூசித் திட்டத்தின்போது சுகாதாரத்துறையினருக்கும்,  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றே பரிந்துரைக்கப்பட்டிருந்தது. குறித்த பரிந்துரையைப் புறந்தள்ளிவிட்டு தடுப்பூசி விடயத்தில் அரசியல் தீர்மானமே எடுக்கப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோனமைக்கு  இந்த நிலைமையே காரணம். ஏனெனில் கொரோனா மரணங்களில் 80 முதல் 90 வீதம் வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

அதேவேளை, நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கறுப்புப்பணத்தைச் சட்டபூர்வமாக்குவதற்கான சட்டமூலம்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது கொரோனா நெருக்கடியைக்கூட தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்குத் துரோகமிழைக்கும் செயற்பாடுகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது – என்றார்.