கொவிட்-19 இன் தோற்றத்தைக் கண்டறிதல் குறித்த அறிக்கை

202 0

கொவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலுமுள்ள மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொற்றுநோயை திறம்பட மற்றும் நிலையான முறையில் தோற்கடிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை பல்தரப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வழங்குகின்றது.

வைரஸின் தோற்றம் குறித்து ஒரு விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் பாரபட்சமற்ற ஆய்வை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இது சம்பந்தமாக, உலக சுகாதார தாபனம் ஆற்றிய முன்னணிப் பங்களிப்பையும், மார்ச் 2021 இல் வெளியிடப்பட்ட உலக சுகாதார தாபனம் கூட்டிய உலகளாவிய ஆய்வின் கூட்டு அறிக்கையின் உள்ளடக்கங்களையும் இலங்கை குறிப்பிடுகின்றது.

SARS-Co-V-2 இன் தோற்றம் பற்றிய ஆய்வானது, விஞ்ஞானம் மற்றும் சான்றுகள் சார்ந்த முறைமைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுடன், அது அரசியல் மயமாக்கப்படலாகாது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது. முந்தைய உலக சுகாதார தாபனத்தின் தலைமையிலான கூட்டு ஆய்வு அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புக்களை ஆய்வின் அடுத்த கட்டம் பிரதிபலித்தல் வேண்டும்.

இது தொடர்பில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு இணக்கமான மற்றும் விரிவான தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து சர்வதேச பங்காளிகளுடனும் இலங்கை ஆக்கபூர்வமாக தொடர்ந்தும் ஈடுபடும்.