இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் முன்னிலை பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் மொத்தம் 47 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் அதிக வெற்றிகளை குவித்த அணியாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள அதேவேளை 3 போட்டிகளை சமப்படுத்தியுள்ளது.
இதேவேளை, வெற்றிகளை பெறாத அணியாக சிம்பாப்வே அணி உள்ளது.
இந்த அணி 4 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்த வருட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 90 சதங்கள் பதிவாகின.
இதில்; விராட் கோலி, மொயீன் அலி, ஸ்டீவன் சுமித், ஆகியோர் அதிகபட்சமாக தலா 4 சதங்களை பெற்றுள்ளனர்.
அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிவர்களில் இந்தியாவின் அஸ்வினும் முதலிடம் பெற்றுள்ளனர்.
இதேவேளை இந்த ஆண்டில் மொத்தம் 98 ஒரு நாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
அதிகபட்சமாக அவுஸ்திரேலிய அணி 29 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 17ல் வெற்றியும், 11ல் தோல்வியையும் சந்தித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவர்களின் பட்டியலில் 1388 ஓட்டங்களுடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவும் முதலிடத்தில் உள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டில் நூறு 20 க்கு 20 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் அதிகபட்சமாக இந்திய அணி 21 போட்டிகளில் விளையாடி 15 வெற்றிகளை பெற்றதுடன் 5 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.
ஒரு ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
20க்கு 20 போட்டிகளில் அதிகபட்ச தனி நபர் ஓட்ட எண்ணிக்கையாக ஆஸ்திரேலியாவின் மெக்ஸ்வெல் 145 ஓட்டங்களை பெற்றார்.
இந்த வருடத்திற்கான போட்டிகளில் இலங்கை அணி குறிப்பிடத்தக்க அளவு சாதனைகளை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.