அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடர்வோம்-சுரேஷ்

230 0

13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்களே வழங்கப்பட்டன எனத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுவதை பார்க்க முடிகின்றதெனவும் கூறினார்.

இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறதெனவும் இது குறித்து தமிழ் மக்கள் தேசிய  கூட்டணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், அவர் கூறினார்.

அவரது இல்லத்தில், இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  ஐ.நா சபைக்கும் இந்தியாவுக்கும், தாங்கள் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம், மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவோம், இப்பொழுது உள்ள அதிகாரங்களை விட மேலதிகமான அதிகாரங்களை வழங்குவோம் என இந்த அரசாங்கம் கூறிக்கொண்டு, இப்பொழுது இருக்கக்கூடிய அதிகாரங்களையும் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்ற நிலையையே பார்க்க கூடியதாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

முக்கியமாக வைத்தியசாலைகளை பறிப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏற்கெனவே மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள நிலையில், வடமாகாணத்தில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் மத்திய அரசாங்கம் கையகப்படுத்தி இருக்கின்றதெனவும் கூறினார்.

மத்திய அரசாங்கம், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து,  உண்மையாகவே மாகாணத்திலுள்ள முற்றுமுழுதான அதிகாரங்களை பறித்தெடுத்து, தமிழ் மக்களுக்கு என்ன காரணத்துக்காக போராடினார்களோ அதனை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றதெனவும், சுரோஷ் தெரிவித்தார்.

‘இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவே இலங்கையில் மாகாண சபை உருவாக்கப்பட்டது. அதன் மூலம்  13ஆவது திருத்தத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுவதை பார்க்கமுடிகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். மிக விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்காக குரல் கொடுக்க வேண்டும்’  என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும், அதில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்தும், தெரியப்படுத்த வேண்டும் என்றார்.