கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண் குழந்தை

366 0

கங்கை நதியில் மிதந்து வந்த குழந்தையை அரசே தத்தெடுப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.மகாபாரதத்தில் குந்தி தேவி, தனது குழந்தையை கூடையில் வைத்து நதியில் மிதக்க விட்டுவிடுவார். நதியில் மிதந்து வரும் குழந்தையை வேறு ஒரு தம்பதி வளர்ப்பார்கள். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் ஓடும் கங்கை நதியில் கரையோரம் படகில் குலுசவுத்ரி என்பவர் சென்று கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி ஆற்றில் மிதந்தபடி வந்தது.

உடனே அப்பகுதி மக்கள் மரப்பெட்டியை மீட்டு திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்குழந்தை பிறந்து 20 நாட்களே இருக்கும்.

அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த மரப்பெட்டியில் சிவப்பு நிற துணியில் குழந்தை சுற்றப்பட்டு இருந்தது. மேலும் காளிதேவியின் புகைப்படமும் வைக்கப்பட்டு இருந்தது.

அக்குழந்தையை தானே வளர்ப்பதாக கூறி படகுக்காரர் தனது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே கங்கை நதியில் மிதந்து வந்த குழந்தையை அரசே தத்தெடுப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். குழந்தைக்கான வளர்ப்பு செலவு, வீடு உள்பட அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

குழந்தையை கண்டெடுத்த படகுக்காரரிடமே அந்த குழந்தை வளர்க்க ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கங்கை நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் குழந்தைக்கு கங்கா என்று பெயரிட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “குழந்தை தண்ணீரில் தவறி விழுந்ததாக தெரியவில்லை. மரப்பெட்டியை முழுமையாக தயார் செய்து நதியில் மிதக்க விட்டுள்ளனர். அந்த மரப்பெட்டியை புதிதாக வாங்கி இருக்கிறார்கள். குழந்தையின் உடல்நிலையை ஆஸ்பத்திரியில் பரிசோதித்து பார்த்தோம். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.