மன்னாரில் புதிதாக 20 பேருக்கு கொரோனா!

204 0

மன்னாரில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையிலேயே புதிதாக 20 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது,  புதிதாக கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றபோதே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று ஏனைய 19பேரும் கடந்த வெள்ளிக்கிழமை, பனங்கட்டிக்கொட்டு மற்றும் எமில் நகர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 412 பீ.சி.ஆர்.பரிசோதனையின் அடிப்படையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மாவட்டத்தில் இந்த மாதத்தில் மாத்திரம் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள், சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.