முல்லைத்தீவு மக்களை கோவிட் அபாயத்திற்குள் தள்ளிவிடாதீர்கள் – விரைந்து தடுப்பூசிகளை வழங்க கோரிக்கை

35 0

யுத்தத்தின் வடுக்களைச் சுமந்தபடி பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தமது அன்றாட வாழ்வினை நகர்த்தி செல்லும் முல்லைத்தீவு மாவட்ட மக்களை கோவிட் தொற்று எனும் அபாயத்திற்குள் தள்ளிவிடாமல், அவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கோவிட் – 19 தொற்று அதிகரித்துள்ளதுடன், அண்மையில் கோவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும் இதுவரையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் எவையும் வழங்கப்படவில்லை. இந்த நிலையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கோவிட் – 19 தடுப்பூசி விடயத்தினைப் பொறுத்தவரை, நமது நாட்டு அரசு வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்டளவு தடுப்பூசிகளை பெற்றுள்ளது என அறியக்கூடியதாக இருக்கின்றது.

அதிலே குறிப்பாக 31 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளையும், 9 இலட்சம் அஸ்ராசெனெகா தடுப்பூசிகளையும், 65 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளையும் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இதிலே வடக்கு மாகாணத்திற்கு 50 ஆயிரம் சைனோபார்ம் தடுப்பூசிகளும், 14 ஆயிரம் அஸ்ரெசெனெகா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதில் குறிப்பாக 48 ஆயிரம் சைனோபார்ம் தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்திற்கென வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக இந்த தடுப்பூசி விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் வடக்கின் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வன்னி மாவட்டங்களுக்கான தடுப்பூசிகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. எனவே உரியவர்கள் இந்த வன்னிப் பகுதிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்க உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து வருகின்றது. அண்மையில் கோவிட் தொற்றாளர் ஒருவர் மரணித்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

மேலும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து தமது அன்றாட வாழ்க்கையை பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் நகர்த்தி வருகின்றனர்.

அவ்வாறாக பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தமது வாழ்வை நகர்த்திச் செல்லும் எமது முல்லைத்தீவு மாவட்ட மக்களை, தொடர்ந்தும் கோவிட் தொற்று என்னும் ஒரு அபாயகரமான சூழலுக்குள் தள்ளாமல் அவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.