ஓட்டமாவடியில் வீதிக்கு தடை போட்டு பாதுகாப்பு

35 0

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று (11) முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தனிமைப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில் அதற்கான அனுமதி நேற்று மாலை கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது.

இதில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், ஓட்டமாவடி பிரதேச சபையினர், இராணுவத்தினர் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து அப்பிரதேசங்களிலுள்ள வீதிகளுக்கு தடையினை போட்டு பாதுகாப்பு பலப்பப்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த மூன்று கிராம அதிகாரி பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் என்பதோடு பொது மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் பொது மக்களுக்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.