ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்.சிவகுமாரன்

71 0

விடுதலை போராட்ட வரலாறுகளில் போராளிகள் தமக்கு முன்பாக செயறப்ட்டவர்களை முன்னோடியாக கொண்டு தாம் சார்ந்த இனத்திற்காக போராடி வீரமரணம் எய்தியிருக்கின்றார்கள். ஈழத்து மண்ணின் எதிர்கால சந்த்தியினர் சுயமாரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக சிவகுமாரனோ தன்னையே முன்னுதாரணம் ஆக்கி காட்டினார். சயனைடு(Cyanide) விழுங்கி தற்கொலை செய்து கொண்ட முதல் தமிழ் போராளியாக சிவகுமாரன் தன்னுயிரை தமிழுக்கு தியாகம் செய்தார். பிந்திய நாட்களில் ஆயிரக்கணக்கான போராளிகள் இவரை உதாரணமாக கொண்டே ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது உயிர்களை தியாகம் செய்திருந்தார்கள்.இறந்தவர்களின் எலும்புகள்கூட தேசபக்தியை ஊட்டும் வல்லமை பெற்றவை என்பதினை சிவகுமாரனின் வீரமரணம் எடுத்து காட்டியது.

அவருடைய வீரமரணம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்தது. சிவகுமாரன் தனது மரணத்தின் மூலம் விடுதலை போராட்ட உணர்வை ஆயிரக் கணக்காண இளைஞர்களின் இதயத்தில் வித்திட்டு சென்றார்.

யாழ்பாணம் உரும்பிராய் கிராமத்தை சேர்ந்த 23 வயதே மட்டுமான சிவகுமாரன் தனது இளம்பிராயத்தில் தனது இனம் குறித்த கவலையோடு ஆயுத போராட்டத்திற்கு ஆரம்ப கர்த்தாவாக திகழ்ந்தார். உரும்பிராய் தமிழ் இந்து வித்தியாசாலையின் தலமை ஆசிரியராக கடமை ஆற்றிய இவருடை தந்தை பொன்னுத்துரை மற்றும் தாயார் அன்னலக்ஸ்சுமி ஆகியோர் தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர்.

இதன் பின்னணியில் இருந்து உருவான இனம் உணர்வு இவரை ஆயுத குழு ஒன்றின் ஆதரவாளராக்கியது. 1969 இல் தக்கத்துரையின் தலமையில் செயல்பட்டு வந்து சிறிய ஆயுதகுழுவின் ஆதரவாளாக இருந்து வந்த சிவகுமாரன், 1971 ஆம் ஆண்டு சத்தியசீலனின் தலமையில் செயல்பட்டு வந்த மாணவர் அமைப்பான தமிழ் மாணவர் பேரவையில் இணைந்திருந்தார்.

பின்னர் தமிழ் மாணவர் பேரவையில் இருந்து வெளியேறி தானாகவே ஒரு குழுவை உருவாக்கினார். இந்த குழுவானது தீவிர அரசியல் செயல்பாட்டாளர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் சிவகுமாரன் குழு என்று அறியப்பட்டு இருந்தது. உரும்பிராய் இந்து கல்லூரி, யாழ இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் தொழில்நுற்ப கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றிருந்த சிவகுமாரனின் வாழ்வியலில் தமிழ் உணர்வு என்பது அவரை விட்டு அகலாத ஒன்றாக இருந்து வந்தது.

சிங்கள மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக 1970 ஆம் ஆண்டு கொழும்பு இந்து கல்லூரியில் இடம் பெற்ற ஒரு நிகழ்வில் கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சோமவீர சந்திரசிறி உரை நிகழ்த்தியிருந்தார். சந்திரசிறியின் இத்தகைய பேச்சானது சிவகுமாரனை கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது. 1970 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சந்திரசிறி உரும்பிராய் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்த பொழுது அவரின் வாகனத்தில் குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது. குண்டு நேரம் தவறி வெடித்தமையினால் சந்திரசிறி உயிர் தப்பி இருந்தார்.

இந்த குண்டினை சிவகுமாரனே பொருத்தி இருந்தார் என்பது அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. 1971 ஆம் ஆண்டில் யாழ் மேஜராகவும் , சிறிலங்கா சுதந்திரகட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அப்பிரட் துரையப்பா தமிழ் இளைஞர்கள் மத்தியில் துரோகியாகவும், அரசாங்கத்திற்கு துணை போகின்றவராகவும் கருதப்பட்டு இருந்தார்.

இவரது வாகனம் யாழ்பாணம் இரண்டாம் குறுக்கு தெருவில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தவேளை சிவகுமாரன் கைக் குண்டு தாக்குதலை மேற்கொண்டு இருந்தார். இந்த கைக்குண்டு தாக்குதலை சிவகுமாரனே மேற்கொண்டார் என்பதினை தெரிந்து கொண்ட பொலிசார் அவரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர். 1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் பல தமிழ் இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தல்களுக்கும், சிந்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்தனர். பொலிசாரின் பிடியில் சிக்கினால் சித்திரவதைகளுக்கு உள்ளாகவேண்டி ஏற்படும் என்பதினால் சிவகுமாரன் சயனைற் மாத்திரைகளை எடுத்து செல்ல ஆரம்பித்திருந்தார்.

தலைமறைவு வாழ்க்கையினை மேற்கொண்டுவந்த சிவகுமாரன் பெரும் பண கஸ்ரத்திற்கு உள்ளாகி இருந்தார். தன்னுடன் இனைந்திருந்த சில இனம் உணர்வுள்ள இளைஞர்களுடன் அரசிற்கு எதிராக செயற்படுவதற்கு பணம் அவசியம் என்பதினால் 1974 ஆம் ஆண்டு யூன் மாதம் 4 ஆம் திகதி சிவகுமாரன் மற்றும் பிரான்சிஸ் கோப்பாய் வங்கியை கொள்ளையிடுவதற்கு சென்று இருந்தனர்.

இந்தவேளை சிவகுமாரன் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட, பிரான்சிஸ் தப்பித்து இருந்தார். சுற்றிவழைக்கப்பட்ட சிவகுமாரன் தன்னிடம் இருந்த சனைற்று மாத்திரையினை விழுங்கி மயக்கம் அடைந்த நிலையில் யாழ்பாணம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு இருந்தார். கட்டிலில் வைத்து சங்கிலியினால் பிணைக்கப்பட்டு இருந்தவேளை, அன்று இரவே அவரின் உயிர் பிரிந்தாக கூறப்படுகின்றது.

சிவகுமாரனின் உடல் மக்களின் பார்வைக்காக உரும்பிராயில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வேளை ஆயிரக்கணக்காணோர் பார்வையிடுவதற்காக வந்திருந்தார்கள். மாணவர்கள்,பெருமளவிலான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்காணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. 12 வயதுடைய நானும் எனது தந்தையுடன் சென்றிருந்தேன். சில இளைஞர்கள் தமது கைகளை கீறி இரத்த திலகம் இட்டார்கள். அவர்களில் இணுவிலை சேர்ந்த கனகசபை கந்தசாமி தனது கையினை கடுமையாக தாட்டி வெட்டியமையினால் இரத்தம் பீறிட்டு பாய்ந்தது.அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லவேண்டி ஏற்பட்டது. கோப்பாய் வங்கி சம்பவத்திற்கு இவரும் செல்வதாக இருந்து, இவரின் சையிக்கில் சக்கரம் காற்று போயிந்தமையினால் தாமதமாகிப் போனது. சிவகுமாரனின் உடல் எடுத்து செல்வதற்கு முன்பாக அவரின் தந்தை பொன்னுத்துரை ஆசிரியர் ஆற்றிய உரை அங்கு நின்றிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரனையில் இணுவில் கந்தசாமி மற்றும் உருபிராயை சேர்ந்த தவபத்மசிங்கம் (தவத்தான்) ஆகிய இருவரின் வீடும் குற்றத் தடுப்பி பிரிவினரால் சுற்றிவழைக்கப்பட்டது. எஸ்.பி. சந்திரசேகராவினை கொலைசெய்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டு பொதி கந்தசாமி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டு இருந்தது. மூன்று நாட்கள் இவரின் வீடு சுற்றி வழைக்கப்பட்டு குண்டு செயலிழக்கப்பட்டது. கந்தசாமி கைதுசெய்யப்பட்டு கோட்டை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு இருந்தார். இவர் பின்னானில் பிரான்ஸ் நாட்டில் புளொட் இயக்கத்தின் பொறுப்பாளராக செயற்பட்டதோடு தற்போது கனடா நாட்டின் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

சிவகுமாரன் தனது உயிர் தியாகத்தின் மூலம் விடுதலை போராட்ட உணர்வை ஆயிரக்கணக்காண இளைஞர்களின் இதயத்தில் வித்திட்டு சென்றார். சிவகுமாரனின் மரணம் புலிகளின் போராளிகளுக்கு சனைற் குப்பிகளை நிலையான உபகரணங்களாக சுமந்து செல்வதற்கு உத்வேகம் கொடுத்தது என்று புலிகளின் தலைவர் பிரபாகாரன் பின்னைய காலங்களில் தெரிவித்து இருந்ததோடு, சிவகுமாரனை மாவீரர் பட்டியலில் இணைத்தும் இருந்தார். ஆனால் முதலில் உயிர் தியாகம் செய்த சிவகுமாரன் இறந்த மாதமான யூன் மாதத்தில் மாவீரர் நினைவை நடத்தாது, நவம்பர்(பிரபாகரன் பிறந்த) மாதத்தில் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. எமது விடுதலை போராட்டத்தினை மொத்த விலைக்கு குத்தகை எடுத்து வைத்திருந்தவர்களுக்கு சிவகுமாரனின் முதல் உயிர் தியாகம் புரியாது போகலாம். சிவகுமாரனின் வீரமும் அவரின் தியாகமும் தமிழ் மக்கள் மத்தியில் என்றுமே போற்றப்பட்டே வந்துள்ளது.

சிவகுமாரனிற்கு உருப்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டு இருந்த வெண்கலை சிலையானது 1977 ஆம் ஆண்டு கலவரத்தின் போது பொலிசாரினால் சேதப்பட்டு இருந்தது. பின்னர் Riviresa இராணுவ நடவடிக்கையின் போது சிலையின் அடித்தளமே முற்றாக சேதப்படுத்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டு சிவகுமாரனின் சிலை புதியாக அமைக்கப்பட்டு யூன் மாதம் 5 ஆம் திகதி சிவகுமாரனின் நினைவு தினமாகவும், தமிழ் மாணவர் எழுச்சி நாளாகவும் கொண்டாடப் படுகின்றது. தியாக வீரர் சிவகுமாரனின் பெயராலே அணி திரள்வோம். அனைத்து கொடுமைகளையும் உடைத்தெறிவோம்.

செ.குணபாலன்.