மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகள் நியாயமானவை- செல்வம் அடைக்கலநாதன்

225 0

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகள் நியாயமானவை. ஆகவே இவ்விடயத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,  மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை தொடர்ந்து காணப்படுகின்ற போதிலும் இந்த ஊழியர்கள், தங்களது உயிரை பெரிதாக கருதாது மக்களுக்கான சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆனாலும் அதனை பெரிதாக கருதாது தங்களது வேலையை சிறந்த முறையில் செய்து வருகின்றனர்.

இத்தகையவர்களின் நலன் மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும். ஆகவே 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தை கருத்தில் கொண்டு,  நியாயமான தீர்வை அவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்” என அவர் கடிதத்தில் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.