இரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்

304 0

இலங்கையிலுள்ள கொரோனா தொற்றினால் தற்போது சிறுவர்கள் கடும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் தற்போது பெருமளவான சிறுவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளரான பாலசூரிய தெரிவித்துளார்.

சிறுவர்களை தவிர கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் . இலங்கையின் பல பகுதிகளிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஆரம்பத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கே கொரோனா தொற்றானது கணிசமாக ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இருப்பினும் தற்போது கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கே இவ்வைரஸ் தொற்றானது ஆபத்து மிக்க ஒன்றாக மாறியுள்ளது என பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் திட்டவட்டமான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. தற்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாத்திரம் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சிறுவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், சிறுவர்களுக்கான முகக்கவசங்களில் இருந்த கட்டுப்பாடுகள் திருத்தப்பட்டுள்ளன .

இரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னர் 5 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கே முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்தது. எனினும் தற்போது சிறுவர்களிடையே தொற்றுப் பரவலானது அதிகரித்துள்ளமையினால் இரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

இரண்டு வயதிற்கும் குறைவான சிறுவர்களால் முகக்கவசம் அணிந்து கொள்வது சிரமாகும். ஆகையால் பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளின் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் சிறுவர்களை சனநெரிசல் மிக்க இடங்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதுடன், சமூக இடைவெளியை எப்போதும் கடைபிடிப்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.