நந்திக்கடலோரக் காற்று.- பளையூர் அசோக் –

773 0

 

நந்திக்கடலோரக் காற்று.
******* ***
ஒரு வானத்து திரள் முகில்களின்
அடிர்த்தியான குளிர்காற்றை
கரைத்துவிடும் சூரியனைப்போல்
ஒரு இனத்தின் உடலைக்கிழித்து
மானத்தின் போர்வைகளை வேரோடு தின்று
இரத்தக் கலவையில் ஊடறுத்து ஓடியது
நந்திக் கடலிலொரு சிவப்பு
காட்டாறு…!

அழுகைகளின் ஓலக்குரல்கள்
ஆத்மாக்களின் அங்கலாயுப்புக்கள்
அநாதைகளின் மௌனப்புலம்பல்
கற்பத்தில் உதித்த குழந்தைக்கு
பாலுக்காய் பருதவித்த தாய் ஒரு
கனத்த கறுத்த புகைமண்டலத்தை
ரசித்துக்கொண்டேயிருந்தது
வானதேவதை….!

வீதிகளிலெல்லாம் வெள்ளம்
அதன்மேல் மிதந்து தோய்ந்து
காய்ந்து போன சருகுகளைப்போல்
செத்து ஊதி பொருமி வெடித்து
இறுதிமூச்சிரைப்போடு வரும்
என் இனத்தின் பிணங்களை
மீன்களுக்கு இரையாக்கியது
கடல் அலை……!

நாட்டுக்காய் போராடா சென்ற
தன் ஒரே பிள்ளை நாளை
வித்துடலாய் வருவான் என
காத்திருந்த அநாதை தாயின்
கண்ணீருக்காய் அழுது தீர்த்துக்கொண்டிருந்தது
முகில்களின் காதல்….!

நுளம்புகளுக்காய் போர்வைகளில்
உறங்கிய கண்மணிகளை ஒரு
போர் ரவைகளால் துளைத்து
ஆறாத்துயரத்தை ஆத்துவதற்காய்
ஆச்சி காச்சிய கஞ்சிப்பானையை
ஆறேழு பிஞ்சுகளையும் பிச்சுப்போட்டது ஒரு ஆட்லறி

மாடானோம் கேடானோம்
வேள்விக்கான ஆடானோம்
காடுகளுக்குள் புலிகள் சிங்கத்தை
வேட்டையாடிக்கொண்டிருக்க
நாட்டுக்குள் நாம் பலியானோம்
வான் ஏவுகணைகளின்
கொடூர காமப்பசிக்காக…..!

முள்ளிவாய்க்கால் முனையில்
பல சிசுக்கள் தாயின் இருபால்
முலைகளையும் இழந்து தவித்தது
விடத்தல் மரத்தின் கீழே கட்டிய
குடில்களுக்குள் ஒரு குடும்பமே
குருதிச்சேற்றில் குற்றுயிராய்
துடித்துச் செத்தார்கள்
பங்கருக்குள்

ஐயோ ஆண்டவரே!
ஆயிரம்கண் ஆத்தாவே !
பாவத்துக்காய் பிறந்த
இயேசு பிரானே !
உயிரை நேசித்த புத்தனே
ஒரு இனத்தின் அறைகூவல்
உம் காதுகளை தொடவில்லையா
கறைபட்டுக்கிடக்குறோம்
கண்மூடிக்கொண்டீரோ!

அடங்காப் பெரும் நெருப்புச்சுவாலையைபோல்
ஆனந்தபுரத்தின் வெடியோசை
ஒரு ஈழக்கனவின் பிறப்பின்
அக்கினிச்சுவாலைகளானது
ஒரு இனத்தின் இறுதி மூச்சு
விண்ணில் தோன்றாமல்
மறைந்து போனது சூரியன்
மானத்தை காக்காமல்…..!

-பளையூர் அசோக் –