வீடுகளில் கோவிட் தொற்றால் இறக்கும் நபர்கள் இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றனர்

264 0

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான பின்தங்கிய கிராம பிரதேசங்களில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி விடுகளில் இறக்கும் நபர்களின் உடல்கள் இரகசியமான முறையில் அடக்கம் செய்யப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் டி.பீ.எம். கொஸ்தா தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் நிலைமை மோசமானதாக மாறியுள்ளதாகவும் இதனால், இந்த பிரதேசங்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு சுகாதார துறையினர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இறக்கும் நபர்களின் உடல்கள் இரகசியமான முறையில் அடக்கம் செய்யப்படுவதாக கூறப்படும் தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிய தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் கொஸ்தா குறிப்பிட்டுள்ளார்.

இதனால், நோய் பரவலை கவனத்தில் கொண்டு கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், கிண்ணியா பொலிஸ் பிரிவின் கிண்ணியா, பெரிய கிண்ணியா, குட்டிக்கரச்சி, எரிதார் நகர், பெரியாதுமுனை, மாலிந்துறை, ரஹ்மானியா நகர், சின்ன கிண்ணியா, மாஞ்சோலை,கட்டியாறு, குருஞ்சான்கேணி, முனைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.