கூகுளின் சொந்த பிராசஸருடன் உருவாகும் பிக்சல் ஸ்மாார்ட்போன்

341 0

எதிர்காலத்தில் வெளியாகும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் உற்பத்தி செய்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனம் சொந்தமாக சிப்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் வைட்சேப்பல் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய சிப்செட் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சிப்செட் ஜிஎஸ் 101 எனும் பெயரில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் சிலிகான் எனும் பெயர் தான் ஜிஎஸ் என குறிக்கப்படுவதாக தெரிகிறது. புதிய சிப்செட் மூலம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களை சார்ந்து இருக்கும் நிலையை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.
 பிக்சல் ஸ்மார்ட்போன்
வைட்சேப்பல் சிப்செட் பிக்சல் போன் மட்டுமின்றி குரோம்புக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஆர்எம் சார்ந்த சிப்செட்களை தனது ஐபோன் மற்றும் மேக் சாதனங்களில் வழங்கியது.
புதிய சிப்செட்களை கூகுள் நிறுவனம் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங்குடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஹார்டுவேர் பிரிவில் பெரும் முதலீடு மற்றும் அதிரடி திட்டங்கள் உள்ளதை சூசகமாக தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் புதிய தகவல் மூலம் கூகுள் உண்மையில் சொந்த பிராசஸர்களை உருவாக்கி வருவதாகவே பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் கூகுள் நிறுவன நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவோரும் கருதுகின்றனர்.