ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது-அனைத்துலகத் தொடர்பகம்.

509 0

 

03.04.2021

ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி ஈழத்தமிழ் மக்களாகிய எம்மைப் பெரும்துயரில் ஆழ்த்தியுள்ளது. இன ஒடுக்குமுறைகளுக்குள்ளாகித் துயரம் சுமந்துநிற்கும் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையுணர்வைப் புரிந்தும் தெரிந்தும் கொண்டிருந்தவர் இந்தப் பெருமகனார். ஆன்மீகத் தலைவராக அல்லாமல், தன் இனத்தின்மீது பேரன்புகொண்ட தூய மனிதராக வாழ்ந்தவர். தமிழ்மக்கள் பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு தடைவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரத்த குரல் எழுப்பிய உன்னதமானவர் இவர். மக்களின் துயர்துடைக்கும் பணிகளை ஆர்வத்தோடு முன்னெடுத்தவர்.

சிங்கள இனவாத அரசின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, எம்மினத்தின் மீது பெரும் இனப்படுகொலை புரிந்த அரசின் செயல்களை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர். போரின்போதும் 2009ற்குப் பின்னரும் துணிச்சலுடன் உண்மையின் குரலாக, தமிழின அழிப்பின் சாட்சியாக நின்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காவும் அரசியல்கைதிகளின் விடுதலைக்காகவும் தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும் மக்களுடன் இணைந்து போராடிய இன உணர்வாளர்.

தமிழின அழிப்பின் சாட்சியங்களைத் திரட்டி, ஆவணமாக்கிச் சிங்கள அரசிற்கு துணிவுடன் சுட்டிக்காட்டியதோடு, உலகிற்கும் வெளிப்படுத்தியவராவார். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், உறுப்பிழந்தவர்கள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் போன்றோரிற்கான உதவித்திட்டங்களை வழங்கியது மட்டுமல்லாது அவற்றிற்கான அமைப்புக்களையும் உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தார்.

இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் இராணுவமயமாக்கல் நிலஅபகரிப்பு, சிங்களக்குடியேற்றம், சிங்களமயமாக்கல், புத்தமயமாக்கல், மனிதஉரிமை மீறல்களையும் எதிர்த்து, தமிழினத்தின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுத்த வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு ஈழத்தமிழ்மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகவே அமைந்துள்ளது. இவரது இழப்பால் துயருற்றிருக்கும் தமிழ்மக்களோடு இணைந்து இவ் இழப்புத்துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.