தமிழக மீனவர்களின் பிரசன்னம் – வட மாகாண மீனவர்கள் பாதிப்பு – பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தது ஜே.வி.பி

409 0

141222141717_tamil_nadu_fishermen_released_by_sri_lanka_512x288_bbc_nocreditதமிழக மீனவர்களின் அதிகரித்த பிரசன்னம் காரணமாக வட மாகாண மீனவர்கள் கடுமையான வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தவிடயத்தை இன்று ஜே.வி.பி நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

வாய்மொழிமூல கேள்வி எழுப்பலின் போது, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுக்க அரசாங்கம் பேச்சுவார்தை நடத்துகின்றதா என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ, தமிழக மீனவர்களின் பிரச்சன்னம் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டார்.

கடற்படையினர் மற்றும் ரேடார் தகவல்களின்படி, மாதாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழக படகுகள் வட மாகாண கடற்பரப்பை அத்துமீறுகின்றன.

இது தொடர்பில் இந்தியா அரசாங்கத்துடன் பல்வேறு பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தமாதம் தமிழக மற்றும்இலங்கை மீனவர்கள் ஒத்துழைப்பு குழுவின் பேச்சுவார்தை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் இதன்போது குறித்த பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க அவதானம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து தமது கேள்வியை தொடுத்த அனுரகுமார திசாநாயக்க, அண்மையில் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பில் சந்தேகம் எழுப்பினார்.

தமிழக மீனவர்களின் பிரசன்னத்தை குறைப்பதற்காக இலங்கை கடற்பரப்பில் ஒரு பகுதியை அல்லது குறிப்பிட்ட சில தினங்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுப்பட அனுமதிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கூறியதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் இவ்வாறான தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறினார்.

அத்துடன் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் வட மாகாண மீனவர்களுடன் பேச்சுவார்தை நடத்தப்படும்.

அவர்களின் இணக்கப்பாடு இன்றி எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படமாட்டாது.

அத்துடன் தமிழக மீனவர்கள் இலங்கையில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்படவே மாட்டார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.