லெப். கேணல் அமுதாப் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

79 0

லெப்டினன்ட் கேணல் அமுதாப் அவர்கள். “அமுதாப்” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான். உயிர் இருந்தும் பிணமாய் போகும் எதிரி அவன் உயிரும் உடலும். அவ்வளவு வீரமும், தீரமும், நேர்மையும், போரியல் நுட்பமும், களமுனை அனுபவமும், போராட்ட உணர்வும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற தணியாத தாகமும், தலைவர் மீது ஆழமான நேசமும் ,தமிழீழ மக்களில் பாசமும் ,உடனிருக்கும் போராளிகளின் நலனை பேணுதலும் இப்படி எத்தனையோ எத்தனையோ நற்குணங்கள், ஆளுமைகள் நிரம்பப் பெற்ற ஒரு புரட்சி மிக்க சாதனைப் போராளி இவர்.

இவருடைய வீரதீரங்களை யாராலும் முழுமையாகக் கூறிவிட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழீழத்தில் நாம் இழந்த பல முத்துக்களில் லெப்டினன் கேணல் அமுதாப் என்ற முத்துவும் ஒன்று.

இவர் வவுனியா மாவட்டத்தின் ஈச்சங்குளம் ,சாஸ்திரி கூடங்குளம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த செல்வப் புதல்வன்.

பணமும், பாசமும் ,நேசமும் ,பிரியமும், அக்கறையும் நிறைந்த, ஒரு செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த தவப்புதல்வன்.

பிறந்ததிலிருந்தே வறுமை கஷ்டம் என்பதை அறியாது மிகவும் செழிப்போடு வளர்ந்து வந்தவர்.

அதே கிராமத்தில் உள்ள பாடசாலையிலே தன்னுடைய ஆரம்பப் பள்ளிப் படிப்பையும் நிறைவு செய்தவர்.

பொதுவாகவே அந்தக் காலப்பகுதியில் ஒரு தவறான கண்ணோட்டம் எமது மக்கள் மத்தியில் இருந்தது உண்மை. அதாவது கஷ்டப்படுகிறவர்களும், வறுமையில் வாடுகிறவர்களும், வேலை வெட்டி இல்லாதவர்களும், எதற்குமே உதவாதவர்கள் தான் போராட்டத்தில் போராடும் போராளியாக போகிறார்கள். என்ற முற்றிலும் மாறுபட்ட ஒரு தவறான கருத்து மக்கள் மத்தியில் இருந்தது மறுக்க முடியாத நிஜம்.

அந்தத் தவறான கண்ணோட்டத்தை மாற்றியது லெப்டினன் கேணல் அமுதாப் அவர்களின் ஒரு செயற்பாடு .அதாவது வறுமை என்றே என்னவென்று தெரியாத குடும்பத்தில் பிறந்த அவர், தமிழரின் நிலை கண்டு, இனவெறி பிடித்த சிங்களவன் தமிழரை அடிமைகளாக நடத்துவதைக் கண்டு, எமது உரிமைகளை மீட்க நாம் போராடினால் தான் முடியும் என்ற ஒரு நிலைப்பாட்டில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழியில் தன்னையும் ஒரு போராளியாக, இணைத்துக் கொண்டார் லெப்டினன் கேணல் அமுதாப் அவர்கள்.

அன்றிலிருந்தே தவறான கண்ணோட்டத்தில் இருந்த மக்களின் மனநிலை மெல்ல மெல்ல மாறியது என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

உண்மையிலேயே வறுமையில் இருப்பவர்களோ ,வேலை வெட்டி இல்லாதவர்களோ, போராளிகள் அல்ல. அவர்கள் எமது இனத்திற்காக ,எமது தமிழீழ விடியலுக்காக போராடும் ,இலட்சிய போராளிகள். மிகவும் உன்னதமானவர்கள் என்பதையும் ,எமது போராட்டம் ஒரு வலிமை மிக்க, நேர்மையான, நீதியான தலைவரின், நெறிப்படுத்தலில் இயங்குகின்ற நியாயமான உரிமைக்கான போராட்டம் என்பதை, மக்கள் உணரத் தொடங்கினார்கள்.

இவர் போராளியாக இணைந்து பல களம் கண்டு, விழுப்புண்கள் பல பெற்று, வீரதீர சாதனைகள் பல படைத்து, படிப்படியாக இவருடைய திறமைகளால் பல உயர்வுகளைப் பெற்று ,2003, 2004 காலப்பகுதிகளில் (இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டிருந்த காலப்பகுதி) இதே காலப்பகுதியில் லெப்டினன் கேணல் அமுதாப் அவர்கள் தான் பிறந்து வளர்ந்து, ஓடித்திரிந்த வவுனியா மாவட்டத்திற்கு வந்திருந்தார்.

அங்கு வந்து நமது போராட்டத்தின், போராட்ட வரலாறுகளை எமது மக்களோடு ,இளைய சமுதாயத்தினரோடு பகிர்ந்து கொண்டார் .(அவருடைய பேச்சாற்றலால்) பலர் சமாதான காலப்பகுதியிலும் போராட்டத்தில் இணைந்தார்கள் என்பதும் முற்றிலும் உண்மை.

சமாதான காலப் பகுதியில் டென்மார்க் நாட்டில் கேணல் கிட்டு அவர்களின் நினைவுநாளில் லெப்.கேணல் அமுதாப் அவர்கள் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இவை. காலத்தின் தேவையாய் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

அதே அவருடைய பேச்சாற்றலைக் கண்டு, அவருடைய ,அவரை நேரிலும் பார்த்த, அவருடைய பரந்து விரிந்த அறிவுத்திறன் எல்லாவற்றையும் நேரடியாக அனுபவித்த அவருடைய அண்ணன் மகன் வினோத்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் போராட்டத்தில் இணைந்தார் என்பது பலரும் அறியாதது.

போராட்டத்தில் இணைந்து, வன்னிப்பகுதியில் சென்று, தனது போராட்ட அடிப்படை பயிற்சிகளை நிறைவுசெய்து, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் தமது சித்தப்பா (அதாவது லெப். கேணல் அமுதாப் அவர்கள்அவர்களோடு )அவருடைய அண்ணன் மகனும் போராளியாக சேர்ந்து இருவரும் வவுனியா மாவட்டத்தில் சில பணிகளை செய்தார்கள் என்பதும் பலரும் அறியாத ஒரு விடயம்.

இதன் பின்னர் அவர் திருமணபந்தத்தில் இணைந்தார். (மனைவியும் போராளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) இல்லறத்தின் இனிமையாக அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னரும் தமது களமுனை பணிகளில் எந்த தளர்வுமின்றி தொடர்ந்து செய்து வந்தார்.

இப்படியாக 2009 ஆம் ஆண்டு பல இடப்பெயர்வுகள், எதிரியவனின் அதிரடியான முன்னேற்ற நடவடிக்கைகள், பல துரோகங்கள் காட்டிக்கொடுப்புகள் இத்தனைக்கும் மத்தியிலும் இறுதிவரை உறுதியோடு இருந்த பல்லாயிரம் போராளிகளில் லெப்.கேணல் அமுதாப் அண்ணனும் ஒருவர்.

இறுதியாக 31 /03/ 2009 தனது உயிரை ஈழத்திற்காக அர்ப்பணித்து லெப்டினன் கேணல் அமுதாப் அவர்கள் வீரகாவியமானார்.

இவரை பிரபு மாமா என்று செல்லமாக அழைக்கும் இவருடைய மருமகள்களான கப்டன் அன்பினி( வன்னி விளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு.)
மற்றும் மாவீரர் அறிவொளி ( தகுதி நிலை தெரியாது.) மேலும் மாவீரர் மெய் மகள் (தகுதி நிலை தெரியாது) இறை சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைப் பற்றி கூறுவதற்கு இன்னும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. அத்தனையையும் இதில் கூறிவிட முடியாது.

நினைவுப் பகிர்வு
அருந்தமிழ்
31/03/2009