கிளிநொச்சியில் அதி நவீன இயந்திரங்கள் மூலம் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் பொலிஸாரால் கைது

324 0

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதையல் தோண்ட முற்பட்ட வேளை ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராதநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கேனிங் இயந்திரத்துடன் மாத்தளை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து சென்ற ஐவர் கடந்த 29 ஆம் திகதி புதையல் தோண்டுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் தகவல் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு ஐவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் பூசை வழிபாடுகளுக்காக அழைத்து செல்லப்பட்ட முதியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் நவீன ஸ்கேனிங் கருவி ஒன்றும் மற்றும் ஏனைய பொருட்கள், அவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இவர்கள்கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐவரையும் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.