காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு மெகபூபா முப்தி ஆஜரானார்.
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஓராண்டு காலத்துக்கு மேல் வீட்டுக்காவலில் இருந்த பிறகு விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக, அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த 22-ந்தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
ஆனால், இந்த சம்மனை ரத்துசெய்ய உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மெகபூபா முப்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால், சம்மனுக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறைக்கு மெகபூபா முப்தி ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் 22-ந்தேதி நான் ஆஜராக இயலாது. விரைவிலேயே விசாரணை நடத்த நீங்கள் விரும்பினால், ஸ்ரீநகரில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். அல்லது ஸ்ரீநகரில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜராக தயாராக இருக்கிறேன்’’ என்று அவர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்த முடிவானது. அதன்படி, நேற்று காலை அந்த அலுவலகத்துக்கு மெகபூபா முப்தி சென்றார்.
விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

