சீனி வரி மோசடியை மறைப்பதற்காக அமைச்சர் புர்கா தடையை அறிவித்தார்

348 0

சீனி வரி மோசடியை மறைப்பதற்காகவே புர்ஹா தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

பாரிய சீனி மோசடி மீதான மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக புர்காவை தடைசெய்யும் விவகாரம் குறித்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புர்கா தடை ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயம் என்றபோதிலும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக அமைச்சர் தடை குறித்து ஊடகங்களிற்கு தெரியப்படுத்தினார் என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும்வரை அமைசசரவை பத்திரம் இரகசியமானதொன்றாககாணப்படும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமூகங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என தெரிவித்துள்ளார்.

எனினும் புர்காவை தடை செய்வது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார் மனித உரிமை பேரவையில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக அவர் அவ்வாறு அறிவித்துள்ளார் என முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.