தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. 4-வது நாளான நேற்று வேட்பாளர்கள் மும்முரமாக மனு அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நேற்று வேட்புமனுத்தாக்கல் 4-வது நாளாக நடைபெற்றது.
இதில், பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆதிராஜாராம் (கொளத்தூர்), ஆர்.நட்ராஜ் (மயிலாப்பூர்), பி.சத்யநாராயணன் (தியாகராயநகர்), பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் (துறைமுகம்), பா.ம.க. வேட்பாளர் கசாலி (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) ஆகிய அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் ஜே.ஜே.எபினேசர் (ஆர்.கே.நகர்), ‘ஐட்ரீம்‘ ஆர்.மூர்த்தி (ராயபுரம்), ஏ.வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), டாக்டர் என்.எழிலன் (ஆயிரம்விளக்கு), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), த.வேலு (மயிலாப்பூர்), ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்) ஆகியோரும் நேற்று தங்களது வேட்புமனுவை மும்முரமாக அளித்தனர்.
அ.ம.மு.க. வேட்பாளர்கள் சி.ராமஜெயம் (ராயபுரம்), ஜெ.ஆறுமுகம் (கொளத்தூர்), பி.சந்தானகிருஷ்ணன் (துறைமுகம்), என்.வைத்தியநாதன் (ஆயிரம்விளக்கு), கே.என்.குணசேகரன் (அண்ணாநகர்), எம்.சந்திரபோஸ் (வேளச்சேரி), டி.கார்த்திக் (மயிலாப்பூர்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பழ.கருப்பையா (தியாகராயநகர்), ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தோஷ் பாபு (வேளச்சேரி), நடிகை ஸ்ரீப்ரியா (மயிலாப்பூர்), ஏ.ஜெகதீஷ் குமார் (கொளத்தூர்), ஏ.பாசில் (ஆர்.கே.நகர்), சினேகபிரியா (சைதாப்பேட்டை) ஆகியோரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கு.கவுரிசங்கர் (ஆர்.கே.நகர்), பெ.கெமில்ஸ் செல்வா (கொளத்தூர்), சே.ப.முகமது கதாபி (துறைமுகம்), மு.ஜெயசிம்மராஜா (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி), அ.ஜெ.ஷெரீன் (ஆயிரம்விளக்கு), ச.சிவசங்கரி (தியாகராயநகர்), கே.மகாலட்சுமி (மயிலாப்பூர்), பி.சுரேஷ்குமார் (சைதாப்பேட்டை), பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பகவத்சிங் (திரு.வி.க.நகர்-தனி), ஆர்.குமார் (சைதாப்பேட்டை), இந்திய குடியரசு கட்சி (அ) வேட்பாளர் வி.பால்ராஜ் குணா (அண்ணாநகர்) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான நடிகை ஸ்ரீப்ரியா வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘மயிலாப்பூர் தான் எனது பிறப்பிடம். எனவே இங்கு நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் ஒரு மாற்றம் இந்தமுறை தேவை. கமல்ஹாசன் மக்களை சந்தித்தால் விமர்சிக்கிறார்கள். இது தவறு. அவர் எப்போதுமே மக்களுடன் இருப்பவர் தான். நடிகர்கள் வேட்பாளர்களாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? நாங்களும் மனிதர்கள்தானே… எங்களுக்கும் சம உரிமை இருக்கிறது. நல்லது செய்ய நினைக்கும் எவரும் அரசியலுக்கு வருவது தவறே கிடையாது”, என்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. நாளை மறுதினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். இதைத்தொடர்ந்து தகுதியுடைய வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும். வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் தங்களுடைய மனுவை திரும்ப பெறுவதற்கு 22-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
அதன்பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.

