புரவி புயலால் பாதிக்கப்பட்ட இரணைதீவு- இறங்குதுறையை மீள் அபிவிருத்தி செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை

408 0

கிளிநொச்சி- இரணைதீவு, இறங்குதுறை புரவி புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீள் அபிவிருத்தி செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைதீவு பகுதியில் புதிதாக சர்வதேச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட இறங்குதுறை அபிவிருத்தியானது பல மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் இடம்பெற்ற புரவி புயலின் தாக்கத்தினால் அது முழுமையாக சேமடைந்துள்ளது.

நடை பாதைக்காக அமைக்கப்பட்டிருந்த கொங்கீரீட்டுகளும் புரவி புயலினால் முழுமையாக சேதமடைந்து இன்று மக்கள் பயன்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறிய மக்களின் பயன்பாட்டிற்காக சர்வதேச நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட குறித்த இறங்குதுறையானது தரமான கட்டுமான பணிகள் இடம்பெற்றிருந்தாலும், இயற்கை அனர்த்தத்தினால் முழுமையாக இன்று அழிவடைந்து காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கட்டுமான பணிக்காக தமது மீன்பிடி வள்ளங்களும் பயன்படுத்தப்பட்டு அதிலிருந்து கட்டுமான பொருட்கள் எடுத்துவரப்பட்டதாகவும் முழுமையான பங்களிப்புடன் மெற்கொள்ளப்பட்ட குறித்த அபிவிருத்தியானது இன்று பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த இறங்குதுறையை மீள் அபிவிருத்தி செய்து, மக்களின் பயன்பாட்டிற்காகவும் தமது பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அபிவிருத்தி செய்து தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.