பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு உத்தேச தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றம்- பொறுப்புக்கூறலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களிற்கு முதுகில் குத்துகின்ற நடவடிக்கை!

409 0

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படவுள்ள உத்தேச தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றம் என்பதுடன் பொறுப்புக்கூறலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களிற்கு முதுகில் குத்துகின்ற ஒன்றாக காணப்படுகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

சர்வதேச சட்டங்கள் தொடர்பில் உலகத்தாலேயே முதலாவது ஆளாக மதிக்கப்படுகின்ற

ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரே இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுமந்திரன் பாதுகாப்புச் சபையில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்கும். எனவே இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளமையானது மிகவும் அப்பட்டமான பொய்.

கடந்த சனிக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண விஜயத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்திய உயர்ஸ்தானிகர் உடனான சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது பேசப்படுகின்ற அல்லது தயாரிக்கப்படுகின்ற இலங்கை தொடர்பான 46/1 தீர்மானம் தொடர்பாக அவரிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக்கள் கேட்ட போது உண்மைக்கு மாறான, அப்பட்டமான பொய்களைக் கூறியுள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக ஐ. நா மனித உரிமைகள் பேரவை தொடர்பாகத் தமிழ்மக்களுக்குப் பொய்களைச் சொல்லி, தமிழ்மக்களை ஏமாற்றிப் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் சுமந்திரனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கி வைத்திருந்த துரோகச் செயலைத் தொடர்கின்ற வகையில் மீண்டும் தமிழ்மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான கருத்துக்களைச் சுமந்திரன் கூறி வருகிறார்.

மனித உரிமைகள் பேரவையில் உத்தேசித்துள்ள 46/1 தீர்மானத்தில் மூன்று தமிழ்க் கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து கடந்த ஜனவரி-15 ஆம் திகதியன்று ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர், உறுப்பு நாடுகள், மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இருக்கக் கூடிய உள்ளடக்கங்கள் இந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து பொறுப்புக் கூறலை வெளியே எடுக்க வேண்டும் எனத் தெளிவாக கூறியிருந்தமையை இந்த இடத்தில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதுமாத்திரமன்றி உறுப்பு நாடுகள் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் செயற்பட வேண்டும் என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளதுடன் 46/1 தீர்மானம் தொடர்பிலும் அந்தக் கோரிக்கை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் விடப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் கடிதத்தை நாங்கள் எழுதியிருந்தோம்.

அந்தவகையில் ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் மனித உரிமைகள் பேரவையிலும் உள்ள நிலையில் அதில் 47 நாடுகள் மாத்திரம் தான் வாக்குரிமையைக் கொண்ட நாடுகளாக இருந்தாலும் கூட ஐ. நாவில் அங்கம் வகிக்கக் கூடிய அனைத்து நாடுகளும் மனித உரிமைகள் பேரவையிலும் அங்கம் வகிக்கும் நிலையில் அந்தக் கோரிக்கையை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் விட வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் கடிதத்தை நாங்கள் எழுதியிருந்தோம்.

ஆனால்  அந்தக் கடிதத்தில் நாங்கள் எழுதியதற்கு மாறாக 46/1 தீர்மானத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச குற்றவியல் பொறிமுறையொன்றின் மூலம் மாத்திரம் தான் பொறுப்புக் கூறல் இலங்கைத் தீவில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற விடயம் வலியுறுத்தப்படவுமில்லை. அது சம்பந்தமாக மறைமுகமாக கூட வலியுறுத்தப்படவில்லை.

மாறாக கடந்த 30/1 தீர்மானத்தில் ஒரு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்ற அடிப்படையில் சுமந்திரன் கூறுகின்ற கலப்புப் பொறிமுறை அடிப்படையில் உண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

ஆனாலும்இ உள்ளகப் பொறிமுறையில் ஒரு நம்பிக்கையே இல்லை என்ற அடிப்படையில் சரத்தொன்று அதில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்ற அடிப்படையில் எந்தவொரு கருத்தும் இந்தத் தீர்மானத்தில் பதியப்படாமல் மாறாக மீண்டும் அரசாங்கம் தான் இந்தப் பொறுப்புக் கூறலை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்துக்குத் தான் அந்தப் பொறுப்பு இருக்கின்றது என்ற அடிப்படையில் தான் இந்தத் தீர்மானம் வரையறுக்கப்பட்டிருக்கின்றது.

எம்மைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு 46/1 உத்தேச தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமல்ல கடந்த பத்து வருடங்களாகப் பொறுப்புக் கூறலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு முதுகில் குத்துகின்ற ஒரு தீர்மானமாகத் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.

போர் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும் ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சிறிலங்கா பொறுப்புக் கூறல் என்ற விடயத்தைச் செய்ய மறுக்கிறது அல்லது செய்ய முடியாததொரு நிலையிலிருக்கிறது எனக் கூறியதற்குப் பின்னரும் இலங்கையைப் பொறுப்புக் கூறச் சொல்லிக் கேட்பது உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே காணப்படுகிறது. எனவே இந்தத் தீர்மானத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கச் சொல்லிக் கேட்கும் அனைவரும் தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கிறார்கள் என்பதில் தமிழ்மக்களுக்கு எந்தவிதமான சந்தேகங்களும் இருக்கக் கூடாது.

அதுமட்டுமல்ல இன அழிப்புச் செய்த இராணுவத்தையும், அரசியல் தலைவர்களையும் தொடர்ந்தும் காப்பாற்றி ஆட்சிப் பீடத்தில் அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பாக இருக்கக் கூடிய வகையில் இந்தத் தீர்மானம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது என்பதுதான் உண்மை. இந்தத் துரோகத்தைத் தொடர்ந்தும் தமிழர்களின் அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடியவர்களை இனம் கண்டு நிராகரிப்பதற்கு மக்கள் தயார்படுத்தப்படாவிடில் தமிழினம் அழியும் என்பதை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும்
.
இவ்வாறான மோசமான துரோகங்களைக் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாகச் செய்து கொண்டிருக்கின்ற தரப்புக்களைத் தமிழர்களின் அரசியல் அரங்கிலிருந்து அகற்றித் தமிழ்மக்களின் பெயரைப் பயன்படுத்தி எந்தவொரு கருத்துக்களும் தெரிவிக்க முடியாததொரு நிலையை உருவாக்காவிடில் நாங்கள் தெரிந்து கொண்டே எங்கள் தலையில் மண் அள்ளிப் போடும் செயலாகத் தான் நாங்கள் அதனைக் கருத வேண்டியிருக்கும்.

46/1 தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் ராஜபக்ச தரப்பின் ஊதுகுழல் எனவும்  அவர்களின் முகவர்கள் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை நிரப்புவதற்காகச் செயற்படுபவர்கள் எனவும் சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த-2012 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் பயனில்லை. இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாகவோ இலங்கை சம்பந்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான குற்றங்கள் விசாரிக்கப்படாமல் மனித உரிமைகள் பேரவையில் நம்பிக்கை வைத்திருப்பதால் மாத்திரம் பொறுப்புக் கூறல் நடைபெறாது. மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்தை மீறி எதனையும் செய்யாது என்ற விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்த 2012 இலிருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தவர்கள்.விமர்சித்த வர்கள் அரசாங்கத்துக்கு முழுமையாக விலை போய்  அரசாங்கத்தின் நலனைப் பேணுகின்றவர்கள் என்ற அடிப்படையிலான பொய்ப் பிரசாரத்தைப் பத்து வருடங்களுக்கும் மேலாக சுமந்திரன் மேற்கொண்டு வந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் 2014 – 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகைகளுடனேயே சர்வதேச விசாரணை முடிந்து விட்டது. இனியொரு உள்ளகப் பொறிமுறை ஊடாகத் தான் பொறுப்புக் கூறல் முன்னெடுக்கப்படும் எனச் சுமந்திரன் கூறி வந்த நிலையில் அவருடைய கட்சியினர் கடந்த ஜனவரி-15 ஆம் திகதி ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர், உறுப்பு நாடுகள், மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளமை மூலம் தாங்கள் கூறி வந்தது அப்பட்டமான பொய் என ஒப்புக் கொண்டுள்ளார்.

சம்பந்தன் அந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டமை மூலம் பொறுப்புக் கூறல் என்ற விடயம் மனித உரிமைகள் பேரவைக்குள்ளால் ஒருநாளும் அடையப் போவது கிடையாது என்ற விடயத்தை உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளனர்.

எனவே  அப்பட்டமான பொய் மூலம் தமிழினத்தைப் பத்து வருட காலமாக சுமந்திரனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புமே என்பதை எங்கள் மக்கள் மறந்துவிடக் கூடாது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஊடாகவோ மாத்திரம் தான் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தைத் தமிழ்மக்கள் அடையலாம். மாறாக எந்தவொரு வழியிலும் பொறுப்புக் கூறல் என்ற இலக்கை நாங்கள் அடைய முடியாது என்ற விடயத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பல வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அந்த விடயம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தில் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எம்மைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு 46/1 உத்தேச தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமல்ல கடந்த பத்து வருடங்களாகப் பொறுப்புக் கூறலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு முதுகில் குத்துகின்ற ஒரு தீர்மானமாகத் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்