இந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்

216 0

இந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கவே, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்குத் தேவையான சர்வாதிகாரத்தினை வலுப்படுத்துவற்காக ஏற்கனவே அரசியலமைப்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தினைக் கொண்டுவந்தனர். அதன்மூலம் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரம் மீண்டும் உறுதியாகியுள்ளது.

தற்போதைய நிலையில் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரவும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டினை வலியுறுத்தவும் அடிப்படைச் சட்டத்தினை மாற்றுவதற்காகவுமே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன், புதிய அரசியலமைப்பானது சிறுபான்மை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவோ அல்லது இனப் பிரச்சினைக்குத் தீர்வளிக்கக் கூடியதாகவோ அமையும் என நாம் கருதவில்லை. அரசாங்கத்தின் சமகாலச் செயற்பாடுகளைப் பார்க்கும்போதே, அது தெரிகிறது.

இந்நிலையில், மிக முக்கியமாக 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அகற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. அதன்மூலம், மாகாண சபை முறைமைகளை முழுமையாக நீக்குவதும் மத்திய அரசாங்கத்தின் மூலம் நேரடியான ஆட்சியை முன்னெடுப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகவும் உள்ளது.

ஆகவே, 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கி அதன்மூலம் மாகாண சபை முறைமைகள் நீக்கப்படுமாயின், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அல்லது நேரடியான தலையீடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படலாம் என இலங்கை அரசாங்கம் கருகின்றது.

இதனால்தான், புதிய அரசியலமைப்பின் பெயரால் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவதன் மூலம் தமது திட்டத்தைச் சூட்சுமமாக முன்னெடுப்பதற்கு அசராங்கம் காய்களை நகர்த்துகின்றது. இவ்வாறான செயற்பாட்டின் மூலமாக இந்தியாவைப் பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்படாது என்பதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.