பௌத்த அமைப்புக்களுக்கு எதிரான பரிந்துரைகள் பொறுத்தமற்றது

191 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாத குழுக்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக பௌத்த அமைப்புக்களுக்கு எதிரான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டிருப்பது பொறுத்தமற்றது என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்கள் சிலவற்றை தடைசெய்யவேண்டும் என்றவாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, தேரர்கள் சிலர் விசனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குல்கள் இடம்பெறுவதற்கு முன்னரும், நடைபெற்ற பின்னரும் சில பிரதேசங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகள் பதிவானதன் காரணமாகவே பௌத்த தேரர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இதற்காக அவர்களுக்கு எதிரான பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளமை பொறுத்தமற்றது.

தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாத குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, பௌத்த அமைப்புக்களுக்கு எதிரான பரிந்துரைகளை முன்வைப்பது பொறுத்தமற்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பேராயரும் தாம் திருப்தியடையக் கூடியவாறான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறே அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டிய அதேவேளை, அடிப்படைவாத தாக்குதல்களை மேற்கொண்டு அவற்றுக்கு அப்பாவி மக்களை பலியாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.