யாழ்.சுன்னாகத்தில் சிறுவர்களால் நேரவிருந்த பாரிய விபத்து-தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

288 0

யாழ்.சுன்னாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டோசர் வாகனத்தை சிறுவர்கள் சிலர் இயக்கிய நிலையில் ஓட தொடங்கிய டோசர் வேலிகள், துாண்கள் மற்றும் மரங்களை இடித்து தள்ளியவாறு வீடொன்றிற்குள் புகுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் உள்ள ஓர் சிறு வீதியினை அமைக்கும் நோக்கில் ஓர் டோசர் வாகனம் கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது நிறுத்தியிருந்த வாகனத்தில் நேற்று மாலை 4 மணியளவில் சிறுவர்கள் சிலர் ஏறி விளையாடிய நிலையில் திடீரென வாகனம் இயங்கியுள்ளது.

இதனால் சிறுவர்கள் வருகை தந்த துவிச்சக்கர வண்டிக்கு மேலால் ஏறியவாறு டோசர் வீதியால் பயணித்துள்ளது. அதனை நிறுத்த தெரியாத சிறுவர்கள் அவலக் குரல் எழுப்பிய சமயம் வேலிகள், துாண்கள் மரங்களை இடித்து தள்ளியவாறு முன்னேறிய டோசர் வளவில் இருந்த தோட்டத்தின் ஊடாக தொடர்ந்தும் முன்னேறியது.

இதன்போது அந்த வீட்டில் இருந்த சிலர் வீட்டின் முற்றத்தில் இருந்தபோது பதறியடித்து தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு தனித்து இயங்கிய டோசர் வீட்டின் வளவில் நின்ற தென்னையுடன் மோதிய சமயம் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஓடிவந்து டோசரில் ஏறி வாகனத்தை நிறுத்தியதனால் தெய்வாதீனமாக உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன.

இந்த விபத்துக்கள் தொடர்பில் சுன்னாகம் பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து டோசர் உரிமையாளர், காணி உரிமையாளர் மற்றும் டோசரில் ஏறிய சிறுவர்கள் அனைவரும் சுன்னாகம் பொலிசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.