திமுக, அமமுக-வை சமாளிக்க ஆர்.கே.நகர் தொகுதியில் நட்சத்திர அந்தஸ்துடைய வேட்பாளரை களம் இறக்க அதிமுக முடிவு செய்து விந்தியாவை தேர்வு செய்துள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு அ.தி.மு.க. 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட முடிவு செய்துள்ளது.
குறிப்பாக அ.தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகள் மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுடன் நேரில் மோத அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை தவிர்த்து அ.தி.மு.க.வில் நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இதில் நடிகை விந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்.
விந்தியாவை சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் களம் இறக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதி. அதே போல் டி.டி.வி.தினகரனும் போட்டியிட்டு வென்றதோடு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
எனவே இந்த தொகுதியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 3 கட்சிகளும் தீவிரமாக உள்ளன.
களத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க நட்சத்திர அந்தஸ்துடைய வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. முடிவு செய்து விந்தியாவை தேர்வு செய்துள்ளது.
ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு, பாசம், பற்று, மரியாதை காரணமாகத்தான் அ.தி.மு.க.வில் தன்னை ஆரம்பத்தில் இணைத்து கொண்டவர் விந்தியா. ஜெயலலிதா தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி சொல்வார்.
பேச்சு, பிரசாரம் என்று எடுத்து கொண்டால் ஆரம்பத்தில் தட்டு தடுமாறிதான் தமிழில் பேசினார். இருந்தாலும் விந்தியா பேச்சை அ.தி.மு.க. தொண்டர்கள் ரசிக்கவே செய்தனர். ஜெயலலிதா இறந்த பிறகு எத்தனையோ பேர் கட்சியில் இருந்து பிரிந்து போய் விட்டனர். பலர் கட்சி மாறி விட்டனர்.
ஆனால் விந்தியா இப்போதும் அ.தி.மு.க.வில் நீடிக்கிறார். எப்போது பிரசாரம் என்றாலும் சமாதிக்கு போய் ஜெயலலிதாவின் ஆசியை பெற்றுக்கொண்டு களத்தில் இறங்குவது இவரது வாடிக்கை.
சமீபத்தில்தான் அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளர் என்ற பொறுப்பில் இருந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற பதவி உயர்வு கிடைத்தது.

