ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறி, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தையம் இறையாண்மையையும் மீட்கும் ஒரு முயற்சியாக தமிழர்களின் இராஜதந்திர அணியொன்று கற்றலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், கற்றலோனியாவின் ஏனைய முக்கிய தரப்புகளுடனும் விசேட சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளது.
தொடர்ச்சியான இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இந்த அணியில் அனைத்துலக ஈழத்தமிழர் பேரவையின் வெளிவிகராக தொடர்பாளர் திரு திருச்சோதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம,; செல்வராஜா கஜேந்திரன் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் சிவில் சமூகத்தை சார்ந்த டொக்டர் பாலமுருகன் திருநாவுக்கரசு மற்றும் மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.
கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இந்த சந்திப்புக்கள் பயனுள்ளதாக அமைந்ததோடு, ஈழத்தமிழர்களுக்கான தார்மீக அதரவை வழங்குவதற்கு கற்றலோனியா தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்க முன்வந்திருப்பதாகவும் ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஸ்பெயினின் ஒரு பகுதியாகவுள்ள கற்றலோனியா ‘நாம் ஒரு தேசம், நாம் தீர்மானிப்போம்’ என்ற கோசத்தோடு சுதந்திர அரசமைப்பதற்காய் கடந்த முன்னூறு வருடங்களைத் போராடி வருகிறது.
மே 2009ல் ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு இடம்பெற்றது போல் கற்றலோனியர்கள்களும் செப்டெம்பர் 1714ல் பேரவலம் ஒன்றைச் சந்தித்திருந்தனர்.
இறையாண்மையம் சுதந்திரமும் உடையதாக இருந்த தமிழர் தேசம் பிரித்தானிய காலனித்துவத்திற்குப் பிற்பாடே சிறீலங்காவுடன் இணைக்கப்பட்டது. அதேபோன்று, 1714 பேரவலத்திற்குப் பிற்பாடு கற்றலோனியா ஸ்பெயின் இராச்சியத்தின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களின் விடுதலையை சிறீலங்கா அரசு தடுப்பது போல, கற்றலோனிய பிரிந்து செல்வதற்கு எடுக்கும் அனைத்து செயற்பாடுகளையும் ஸ்பெயின் முடக்கி வருகிறது. ஆனால், அடங்க மறுக்கும் கற்றலோனியா தொடர்ந்தும் சுதந்திரத்திற்காக போராடுகிறது. அந்தவகையில், ஈழத்தமிழர்களுக்கும் கற்றலோனியாவிற்கும் இடையில் இடம்பெறும் இந்த இராஜதந்திர சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படுகிறது.