ஊடகவியலாளர் றமீஸுக்கு கிழக்கு மாகாண இளம் கலைஞர் விருது

299 0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வையொட்டி தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு, கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (15) நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவனீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர் எம்.ஏ.றமீஸ், ஊடகத்துறைக்காக இளம் கலைஞர் விருதும், மாகாண மட்டத்தில் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான போட்டியில் புகைப்படத் துறைக்காக முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான முகம்மது அபூபக்கர் முகம்மது றமீஸ், 20 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, பாரம்பரிய கலைகள் மீதான மேம்பாடு, அறிவிப்பு, புகைப்படத்துறை மற்றும் ஊடகத்துறை போன்றவற்றில் கால்பதித்து  செயற்பட்டு வருகின்றார்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் தற்போது உயர்தர மாணவர்களுக்கு தொடர்பாடல் ஊடகத்துறை பாடத்தைக் கற்பித்து வரும் ஆசிரியராகவும் சேவையாற்றி வருகின்றார்.

இதற்கு மேலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தின் பிராந்திய சேவையான பிறை எம்.எம்.வானொலி சேவையின் அறிவிப்பாளரும், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.

கலை இலக்கியத் துறையிலும், மறைந்து வரும் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் முயற்சிகளிலும், வானொலி அறிவிப்புத் துறை, புகைப்படக் கலைத் துறை, கட்டுரை மற்றும் இலக்கியத்துறை மேலோங்கும் செயற்பாடுகளில் முற்றுமுழுதான ஈடுபாடு காட்டியும் வருகின்றார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்டு வரும் இவர், இணையத்தள செய்திச் சேவையொன்றின் செய்தி முகாமையாளராகவும், பத்திரிகையொன்றின் காலாண்டு இதழுக்கான உதவி ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.

மேற்படி காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதியசராஜ் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.