நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

178 0

நாட்டில் நேற்றைய தினம் 588 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 576 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 8 பேரும் அவர்களில் அடங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தான், கட்டார், மாலைதீவு, போலந்து முதலான நாடுகளில் இருந்து நாடுதிரும்பிய தலா ஒவ்வொருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் இலங்கையில் கொவிட் 19 தொற்றுறதியானோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 537 ஆக உயர்வடைந்துள்ளது.

6 ஆயிரத்து 672 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 530 பேர் நேற்று குணமடைந்ததாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கு இன்று முதல் நாளை மறுதினம் வரை நாடாளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவசியமாயின் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய நாடாளுமன்ற பணிக்குழாமை சேர்ந்த 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், முன்னதாக அமைச்சர் தயாசிறிய ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து. அவருடனும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூக் ஹக்கீமுடனும் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது