பொதுச் சுகாதார பரிசோதகர் போன்று பசாங்கு செய்து கொள்ளையிட்ட பெண்!

251 0

பொதுச் சுகாதார பரிசோதகர் போன்று பசாங்கு செய்த வீடொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்ட பெண் மக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவருக்கு உதவியாகச் செயற்பட்ட ஆண் ஒருவரும் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் தொண்டைமானாறு, அரசடியில் நடந்துள்ளது
வீடொன்றுக்குச் சென்ற பெண் ஒருவர், தன்னை சுகாதாரப் பரிசோதகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, வெள்ள நிலைமை தொடர்பாக ஆராய வந்தேன் என்று கூறியுள்ளார்.

கறுப்பு நிற கோட் அணிந்து வந்த அவர், வீட்டின் சுற்றாடலில் தேங்கியிருந்த வெள்ளத்தை ஒளிப்படம் எடுத்த பின்னர், ஆடை மாற்றுவதற்கு அறை ஒன்று தர வேண்டும் கேட்டுள்ளார்.

அறைக்குச் சென்ற பெண் ஆடை மாற்றுவது போன்று, அங்கிருந்த பெட்டகத்துக்குள் இருந்து 5 பவுண் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள் என்பவற்றைத் திருடிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் அறைக்குள் சென்று ஆராய்ந்துள்ளனர். அங்கிருந்த நகைகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்த அவர்கள், ஊர் மக்களுக்கு இது தொடர்பாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்தப் பெண்ணைத் தேடத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண் ஆண் ஒருவருடன் பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஊர் மக்களால் மடக்கப்பட்டார்.

இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்தப் பெண்ணின் கைப்பையில் இருந்து பெருமளவு நகைகளும், தொலைநோக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

நகைகள் கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

அதேவேளை, அந்தப் பெண் வேறும் சில வீடுகளுக்குச் சென்று தன்னைக் கிராம அலுவலர் எனக் கூறியுள்ளார் என்று ஊரவர்கள் தெரிவித்தனர்.