தமிழர் தாயகத்தில் இன்று ஹர்த்தால்! முடங்கியது யாழ்ப்பாணம்

246 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட மைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அனைத்து கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்ட பூரணத்துக்கு யாழ்ப்பாண மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள் யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது  அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புக்கு கண்டனமும் எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினரும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

இன்றைய ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய கட்சி மற்றும் சர்வமத அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட கடற்றொழில் சங்கங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புகள் என அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள், சர்வமத அமைப்புக்கள் ‘யாழ். தூபி இடித்தழிப்பு ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலான விடயம். இன்றைய ஹர்த்தாலுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.

இதேபோன்று, ரவூப் ஹக்கீம் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யாழ். முஸ்லிம் இளைஞர் கழகம் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

இறந்தோரை நினைவு கூரவும், ஜனாஸாக்கள் எரிப்பைக் கண்டித்தும் இந்தப் போராட்டத்துக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் எம்.பி விடுத்துள்ள ஆதரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, ‘வடக்கு – கிழக்கில் இன்று இடம்பெறும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’, என்று ரிஷாத் பதியுதீன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

இறுதிப் போரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவோடிரவாக இடித்து அகற்றப்பட்டது.

யாழ். பல்கலைகழகத்தின் நிர்வாகம் உயர்மட்ட அழுத்தங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.