சிங்கள பௌத்த இனவாதத்தின் கோர முகத்தின் வெளிப்பாடு!

920 0

சிங்கள பௌத்த இனவாதத்தின் கோர முகத்தின் வெளிப்பாடு.- முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழித்தமையாகும்.

தமிழினத்தின் உரிமைகளை மிதித்துச் செல்லும் சிறிலங்கா சிங்கள பௌத்த இனவாத அரசிடமிருந்து தமிழர்களுக்கான நீதியையோ, நிம்மதியான வாழ்வையோ பெறுதல் சாத்தியமற்றது என்பதைக் கடந்து செல்லும்(யனவரி 08.2021)இன்றைய இரவும் பதிவுசெய்தவாறு நகர்கிறது. 2009இல் சிங்கள அரசபடைகள் முள்ளிவாய்க்காலில் ஏற்படுத்திய மனிதப் பேரழிவாலும் அவலத்தாலுமான காயங்களை ஆற்றுவதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான செயலையும் செய்யாத அரசுகள் தமிழினத்தைத் தேசிய நீக்கம் செய்து அனாதைகளாக்குவதில் முனைப்போடு செயலாற்றிவருவதன் இன்னொரு வடிவமே யாழ்.பல்கலைக் கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியினை இடித்து அழித்தமையாகும்.
எதிரிப் படையினனின் உடலத்தையோ அவர்களது நினைவுக் கல்லறைகளையோ அவமதித்தல் கூடாது என்ற உலகநியதியைப் புறந்தள்ளிக் கோத்தபாய ராயபக்ச பாதுகாப்புமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை இடித்தழித்ததோடு மனநிறைவடையாது, தற்போது தனது சனாதிபதிப் பதவிக்காலத்தில் இனவழிப்பிலே கொல்லப்பட்ட மக்களின் நினைவாக நிறுவப்பட்ட தூபிகளை இடித்தழிக்கும் கைங்கரியத்தில் தனது ஏவலாளர்களை இறக்கிவிட்டுள்ளமை இலங்கைத்தீவிலே அமைதிக்கான சாத்தியப்பாடுகளைப் பின்னோக்கித் தள்ளுவதாகவே அமையுமென்பதில் ஐயமில்லை.

இறந்தோரை நினைவுகூரும் உரிமையை மறுத்துவருவதோடு, அந்த நினைவுகளின் வழியே தம்மை ஆற்றுப்படுத்த நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபிகளையும் சின்னங்களையும் அழித்துவருவதோடு அனைத்துலகால் ஏற்றுகொள்ளப்பட்ட சட்டங்களையும் எதேச்சதிகாரத்தோடு மீறிவரும் சிங்கள பௌத்த இனவாத அரசின்மீது அனைத்துலக குமுகாயமானது காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்ளாதவரை தமிழினத்தின் மீதான இதுபோன்ற அடக்குமுறைகள் சனனாயத்தின் பேரால் தொடரவே செய்யும்.

சனனாய விழுமியங்களை மதிக்கும் சாதாரண குடிமக்களிடம் சனனாயகம் என்பது மக்களுக்கானதா அல்லது ஒடுக்கும் அரசுகளுக்கானதா என்ற வினா பரவலாக எழுமாயின் சனனாயகம் கேள்விக்குள்ளாகும் நிலைதோன்றுவது ஆரோக்கியமற்றதாகும். வட-கிழக்கிலே சிங்கள பௌத்த இனவாதப் படைகளைக் குவித்துவைத்தவாறு அடக்குமுறையூடாகத் தமிழினத்தின் இருப்பை இல்லாதொழித்துவரும் சிங்கள பௌத்த இனவாத அரசைத் தண்டிக்காது, தமது பொருண்மிய மற்றும் பிராந்திய நலன்களுக்காகக் கண்டும் காணததுபோல் இருப்பதனூடாக அனைத்துலக குமுகாயமானது இதனைத்தான் சனனாயகம் என்று சுட்டுகிறதா?

சனனாய விழுமியங்களின் பெயரால் சிங்கள பௌத்த இனவாதத்தின் தமிழின அழிப்பின் நிகழ்ச்சி நிரலையும், அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தும் இச்செயலையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, தமிழீழ மக்களின் கண்டனத்தை அனைத்துலக அரசுகள் காதுகொடுத்துக் கேட்க வேண்டுகின்றோம்.