யாழ். பல்கலைக்கழக போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு

252 0

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டதைக் கண்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலுக்கு நீதி கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இ.அனுசன் தெரிவித்தார்.

இதேவேளை, நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். பல்கலைக் கழக வழாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பல்கலைக் கழக நிர்வாகத்தினால் நேற்று இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது.

2008 ஆண்டு மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ; தமிழ் மக்களின் நினைவாகவும் மாணவர்களின் நினைவாகவும் யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட தூபியானது, அமைக்கப்பட்ட காலம் முதல் அரசு அதற்கான எதிர்ப்பினை வெளியிட்டே வந்த்தாகவும் தற்போது அனுமதி அற்ற கட்டிடம் என்ற வகையிலேயே இது இடிக்கப்பட்டது என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, இந்த தூபி இடிப்பு இரவுவேளையில் மின் குமிழ்கள் அணைக்கப்பட்டு இரகசியமாக இடம்பெற்றதால் ஏற்கனவே நீண்டகாலமாக உள்ள தூபியும் இடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாணவர்களும் சமூக நோக்கம் கொண்டவர்களும் குறித்த பகுதியில் ஒன்று கூடினர்.<

இதன்போது பிரதான தூபி இடிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதம் வழங்குமாறு பல்கலைக் கழக நிர்வாகத்திடம் பலரும் கோரியபோது நிர்வாகம் மௌனம் காத்தமையால் அங்கே தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதோடு பல்கலைக்கழக வாசல் கதவு முன்பாக அதிரடிப் படையினர் ஆயுதம் தாங்கி நிற்க அரசியல்வாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எதிரே அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளதாகவும் குறித்த பகுதி பரபரப்பாகவும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.