ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

302 0

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பார்த்திபனூரில் கால்நடை வளர்ப்பவர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந் தேதி சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார். 27-ந் தேதி சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதன்தொடர்ச்சியாக 6 நாள் சுற்றுப்பயணமாக நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக மதுரையில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.05 மணிக்கு காரில் புறப்பட்டார்.

மதுரை மாவட்டம், விரகனூரில் அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து வழி நெடுகிலும் பல இடங்களில் திரண்டிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் அவரை வரவேற்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை வழியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் சென்றது. திருப்புவனத்தில் அவரை விவசாயிகள் சந்தித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அவர்கள் வழங்கினர். அதனை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மானாமதுரையில் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பார்த்திபனூரில் கால்நடை வளர்ப்பவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் தெளிசாத்த நல்லூரில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்தார். மதியம் பரமக்குடி தொகுதியில் நெசவாளர்கள், வணிகர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவாடானை தொகுதி பட்டினம்காத்தான் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடினார்.

பிற்பகல் 1.45 மணிக்கு ராமநாதபுரத்தில் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மாலை 3.30 மணிக்கு ராமநாதபுரம் நகரில், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். 4.45 மணிக்கு திருப்புல்லாணியில் மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். 6.15 மணிக்கு முதுகுளத்தூர் தொகுதி கடலாடியில் மரக்கரி தயாரிப்பவர்களை சந்தித்து பேசுகிறார்.

இரவு 7.15 மணிக்கு சாயல்குடியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். 8.30 மணிக்கு முதுகுளத்தூர் கன்னிராஜபுரத்தில் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அதன் பிறகு அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையை ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.