ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு

328 0

ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைபிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நேற்றுவரை ஜெர்மனியில் 13 லட்சத்து 20 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 171 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசு கடந்த சில வாரங்களாகவே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

அதன்படி தற்போது ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைபிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முழு ஊரடங்கு இன்று அல்லது நாளை முறைப்படி அமல்படுத்தப்படும் என்றும் இது அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி பள்ளி கல்லூரிகளை மூடுவதோடு, மிகவும் அத்தியாவசியமான கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.