போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய

336 0

நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.

இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

இலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள்.

பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.