நாயுடன் விளையாடியபோது பைடன் காலில் சுளுக்கு- விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து

241 0

ஜோ பைடன் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப் பணிகளை தொடங்கி உள்ளார். தனது அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களை தேர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், பைடன் சனிக்கிழமை தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனையடுத்து டெலாவரில் உள்ள எலும்பியல் சிகிச்சை மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், அவரது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு தொடர்பான புகைப்படம்  மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பைடனுக்கு வலது காலில் சுளுக்கு ஏற்பட்டிருப்பதை அவரது மருத்துவர் கெவின் ஓ கென்னார் உறுதி செய்துள்ளார். பைடனுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், அதேசமயம் பல வாரங்களுக்கு நடைபயிற்சிக்கான பூட்ஸ் அணியவேண்டியிருக்கும் என்றும் மருத்தவர் கூறி உள்ளார்.
பைடன் விரைவில் குணமடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.