வரலாற்று நாயகர்களுக்கு யேர்மன் நாட்டின் தலைநகரில் வரலாற்றுச் சதுக்கத்தில் நினைவேந்தல் – தேசிய மாவீரர் நாள் யேர்மனி – பேர்லின்

725 0

தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்!

ஆம் அந்த உன்னத மாவீரர்களை வணங்கும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லினில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்றைய தினம் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கொடிய கொரோனா தொற்றுநோயின் மத்தியிலும் கடும் குளிரிலும் கனத்த இதயத்தோடு மாவீரர்களை வணங்க பேர்லின் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடினர். யேர்மன் நாட்டின் அதி முக்கிய வரலாற்று சதுக்கத்தில் தமிழீழ தேசியக்கொடி பட்டொளி வீச தமிழீழ தேசியத் தலைவரின் தன்னிகரில்லா காட்சி உயர்ந்து நிற்க மாவீரர்களின் உறவுகள், மக்கள் தமது பிள்ளைகளின் கல்லறைகளை சூழ்ந்து நிற்க தாயக நேரம் மாலை 6:05 மணிக்கு , ஐரோப்பிய நேரம் 13:35 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்ட வேளையில் , அகவணக்கம் செலுத்தப்பட்டு , துயிலுமில்லப் பாடல் ஒலிக்க முதன்மை சுடர்/ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

குறித்த மணித்துளிகளில் ஒவ்வொரு மக்களின் கண்களிலும் கண்ணீர் வடிந்து மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு கார்த்திகைப் பூக்களாக சொரிந்த காட்சி வார்த்தைகளில் வரைந்து விட முடியாதது.சொரிந்த பூக்களும் ஏற்றிய சுடர்களும் ஒன்றுகலந்து காட்சியளித்தது.

தொடர்ந்து மாவீரர்களின் உணர்வுகளோடு சங்கமிக்கும் வகையில் கவிதைகள் பாடப்பட்டது.இறுதியாக மாவீரர்கள் கண்ட கனவை, இறைமையுள்ள தமிழீழ அரசை, அடையும் வரை ஓயாமல் உழைப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் , தேசியக்கொடி இறக்கப்பட்டு , தமிழீழ தேசிய மாவீரர் நாள் பேர்லின் மண்ணில் நிறைவுபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி