5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

287 0

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. 19 மதகுகளில் 7 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக அடையாற்றில் சேர்ந்து கடலில் கலக்கும்.
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்பட்டுள்ளது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று மதியம் 22 அடியை நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார்.
முதல்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் சூழ்நிலையை பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.