மாவீரர் தினத்தை நினைவுகூர மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிப்பு

292 0

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூர மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவுக்கு எதிராக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் ஊடாக நகர்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதன் போதே விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம். கணேசராஜா குறித்த தடை உத்தரவை நீடித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நினைவேந்தல்களை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலருக்கு குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தடை உத்தரவுக்கு எதிராக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.
இதன் போது குறித்த வழக்கு விசாரணை சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை காலை குறித்த வழக்கு விசாரணைகளுக்காக மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த உத்தரவை வழங்க நீதவான் நீதிமன்றத்துக்கு சட்டத்திலே நியாயாதிக்கம் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

மேலும் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லாது இருந்த போதும் கூட பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் எந்தச் சட்டத்தையும் மீற மாட்டோம். சுகாதார நடை முறைகளைக் கையாளுவோம்.

பொது நிகழ்வை நடாத்தினால் சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுச் செய்வோம்.
என்கின்ற உத்தரவாதங்களையும் நீதிமன்றத்துக்கு வழங்கி தடை உத்தரவை நீக்குமாறு கோரி இருந்தனர்.

எனினும் மன்னார் நீதவான் குறித்த தடை உத்தரவை நீக்க மறுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் உள் நாட்டிலும்,வெளிநாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற காரணத்தால் குறித்த நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும், கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலமையில் இருப்பதினாலும் மக்கள் ஒன்று கூடினால் குறித்த தொற்று பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையாலும் ஏற்கனவே பொலிஸார் ஊடாக வழங்கப்பட்ட உத்தரவுகளை நீடிப்பதாகவும் நீதவான் தெரிவித்தார்.

இதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூர மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.