’வடக்கு, கிழக்கை மூடி மறைத்துவிட்டனர்’

101 0

வடக்கு, கிழக்கு என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பன இந்த வரவுசெலவுத்திட்டத்தில் முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய (20) விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்த வரவு செலவுத்திட்டம் சிங்கள தேசத்தையும், யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளையும் சமத்துவம் ஆக்கும் நோக்கில் முன்வைக்கப்படவில்லை.

யுத்தத்தினால் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

போரினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள், பிள்ளைகளை இழந்து தவிக்கும் வயது முதிர்ந்தவர்கள், சரணடைந்தவர்களின் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் தங்கியிருந்த பெண்கள், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு பெற்றவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர்களை இந்த வரவுசெலவுத்திட்டம் கைவிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பன இந்த வரவுசெலவுத்திட்டத்தில் முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. அழிவுகளிலிருந்து மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒதுக்கீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கை என்ற பெயரில் தென்பகுதியையும், போரால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கையும் ஒரே மாதிரி கட்டியெழுப்ப முடியாது.

இலங்கையில் மிகவும் ஏழ்மையானவர்கள் வாழும் பகுதியாக வடக்கு, கிழக்கு மாத்திரமே காணப்படுகிறது. கடந்த 11 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களின் கொள்கைகளால் இந்தப் பிரதேசங்கள் முன்னேற முடியாதவாறு முடங்கிப்போயுள்ளன.” எனவும் தெரிவித்துள்ளார்.