20 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி

48 0

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்குவதே சிறப்பு எனவும், 20 ஆவது திருத்தச்சட்டவரைவு பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் மீள் பரீசிலனை செய்யவேண்டும் எனவும் ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டவரைவுக்கு பௌத்த மகாநாயக்கர்களும் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

“மக்களின் இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன், 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அதனை விரிவாக ஆராய வேண்டும். அனைத்து அதிகாரங்களும் தனி ஒருவர் வசமாவது ஜனநாயக நாட்டுக்கு பாதகமான விடயமாக அமையும்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் உண்மையான ஜனநாயக நிலைப்பாட்டை காண்பிப்பதில்லை. பாராளுமன்றத்தின் அரசமைப்புப் பேரவையூடாக புதிய அரசமைப்பொன்றை உருவாக்கவேண்டும். பொருட்கோடலை மேற்கொள்ள முடியாத வகையில் குறைபாடுகளின்றி அதனை தயாரிக்க வேண்டும்”.