சுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன்

307 0

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பொறுப்பாளராகவுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் நடத்தைகள் அநாகரிகமாகவும் அடாவடித்தனமாகவும் காணப்படுகின்றன. இவர் தான் சார்ந்த பௌத்தமதத்தின் பண்புகளோடு பயணிக்காது காவியுடைக்கும் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றார் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

பன்குடாவெளி கிராமத்தில் அரச ஊழியர்களை தாக்கி தடுத்து வைத்த சம்பவம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (24) தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அண்மையில் மட்டக்களப்பு – பதுளை வீதியிலுள்ள பங்குடாவெளிக் கிராமத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணிக்குச் சென்ற தேரர் வழக்கம் போல் அடாவடிகளை அரங்கேற்றியுள்ளார். தொல்லியல் இடமாக அரசு குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகக்காணி உத்தியோகத்தரைத் தாக்கியுள்ளார். மேலும் அங்கு வந்த தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களைத் தாக்கியதோடு, மூவரைச் சிறைப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மக்களின் அமைதியான நல்லிணக்க வாழ்க்கையை இவர் சீர்குலைத்து வருகின்றார். மட்டக்களப்புத் தொல்லியல் இடங்களுக்குரிய சர்வாதிகாரி போன்று இவர் அடாவடிகளைச் செய்கின்றார். அன்பு, அடக்கம், அஹிம்சை, காருண்யம் போன்ற பௌத்த மதப்பண்புகள் இவரிடம் கடுகளவும் இல்லை.

’ஒரே சட்டம் ஒரே நாடு’ என்கிறது அரசாங்கம். அப்படியிருக்க தேரரால் எப்படி காட்டுச்சட்டம், காட்டாட்சியைக் கையாள முடியும்? என்று மக்கள் கேட்கின்றனர். சட்டத்திற்கப்பால், தாக்குகின்றவனைத் தாக்கவும் தம்மைத் தாமே தற்காத்துக்கொள்ளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன, மத வெறியர்களின் அடாவடித்தன அராஜகங்களை இனியும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அரச பணியாளர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரிய தார்மீகக்கடமையாகும். தேரர் இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அடாவடித்தனங்களை புரிந்துள்ளார்.

ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்பவற்றை பெளத்த மத துறவிகள் குழப்பியிருக்கின்றார்கள் என்பது கடந்தகால வரலாறு. 1957 இல் கொண்டு வரப்பட்ட பண்டா – செல்வா, 1965 இல் டட்லி – செல்வா ஒப்பந்தம், சர்வகட்சி மாநாடு போன்ற பல்வேறு விடயங்களில் அதிதீவிரமான சில பெளத்த மதகுருமார்கள் குழப்பியிருக்கின்றார்கள். இவ்வாறு குழப்பியதன் மூலமாக பல்வேறு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போனது. ஒரு முற்போக்கான சிந்தனையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். இனங்களுக்கிடையில் போட்டி பொறாமை, குரோதம், பகைகளை உருவாக்கக்கூடிய செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். இந்த நாடு சீரான செழிப்பான பாதையில் செல்ல வேண்டுமாக இருந்தால் பெளத்த துறவிகள் அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். குழப்பிக்கொண்டிருப்பார்களாகவிருந்தால் இந்நாட்டின் அபிவிருத்தியும் சிறுபான்மையின மக்களின் அரசியலுரிமையும் தீர்க்கப்பட முடியாததாக இருக்கும்.

பல்லின மக்கள் வாழ்கின்ற நாட்டில் தனி சிங்கள பெளத்தர்களை கொண்ட செயலணி என்பது அந்த இன மதத்திற்குரிய சாதகமான சான்றுகளை எடுத்துக்காட்டுகின்ற ஒன்றாக இருக்கும். எனவே மீண்டும் குழப்பகரமான சூழ்நிலை நாட்டில் ஏற்படுவதற்குரிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எனவே இது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
நம்பகமான வெளிப்படையான செயலுமல்ல. ஆகவே இந்த செயற்பாடுகள் தவிர்க்கப்பட, முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். எனவே தொல்பொருள் செயலணி, பல்லின மக்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்குகின்ற செயற்பாடாகவே இருக்கின்றது என்றார்.