20 ஆவது திருத்தம் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும்: பாராளுமன்றத்தில் கஜேந்திரன்

279 0

அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் உறுப்புரை 41 ஆ வின் பிரகாரம் கணக்காய்வு சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள 20ஆவது திருத்த யோசனையின் பிரகாரம் அது முற்றாக நீக்கப்படுகின்றது.

உறுப்புரை 153 (1) இன் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் தகைமை பெற்ற கணக்காய்வாளராக இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக வரவுள்ள 20ஆவது திருத்தச் சட்ட யோசனையின் பிரகாரம் தகைமை பெற்ற கணக்காய்வாளராக இருத்தல் வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது.

உறுப்புரை 153 (4) இன் பிரகாரம் அரசமைப்புப் பேரவையின் விதப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வரவுள்ள 20ஆவது திருத்த யோசனையில் அரசமைப்புப் பேரவையின் எந்தவொரு விதப்புரையும் இன்றி ஜனாதிபதி ஆளொருவரை நியமிக்கலாம் என்றவாறு மாற்றப்பட்டுள்ளளது.

உறுப்புரை 154 (1) இன் பிரகாரம் அரச திணைக்களங்களதும் ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தினதும் ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் பிரதம அமைச்சரது செயலாளர் அலுவலகம் என்பவற்றின் கணக்குகளை கணக்காய்வு செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், புதிய 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் பிரதம அமைச்சரது செயலாளர் அலுவலகம் என்பன நீக்கப்பட்டுள்ளது.

உறுப்புரை 154 (2) இல் அரச கம்பனிகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், புதிய 20ஆவது திருத்த யோசனையில் குறித்த அரச கம்பனி என்பது நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரச கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் பொறுப்பு கணக்காய்வாளர் நாயகத்தில் பொறுப்புக்கள் அதிகாரங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உறுப்புரை 154 (ஏஐ) இன் பிரகாரம் பகிரங்க கணக்குகளை கணக்காய்வு செய்து பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் அதிகாரங்களும் 20ஆவது திருத்தயோசனையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.

எனவே , இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நாட்டில் பாரிய நிதி மோசடிகளும், ஊழல்களும் இடம்பெறுவதற்கே வழிவகுக்கும்” என்றார்.