நாளை நமதே எந்த நாளும் நமதே

766 0

”மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என 33 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்க் கந்தசாமி கோவில் வீதியில் அமைந்திருந்த உண்ணா நோன்பு மேடையில் லெப். கேணல் திலீபன் எமக்கான வேதத்தை தன்னை உருக்கி உபதேசித்தார்.

இந்திய அரசு தமிழ் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காப்பாற்றும்படி ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்தது லெப். கேணல் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.

• பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் மற்றும் சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

• ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

• இடைக்கால அரசு நிறுவப்படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

• வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

• இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசிடம் நீதி கேட்டு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். கோரிக்கை எதுவும் நிறைவேறாமல் திலீபன் தியாகச்சாவடைந்தார்.

மக்கள் புரட்சி வெடிக்க முற்படும் வேளைகளில் எல்லாம் சிங்கள் பேரினவாத அரசாங்கமும் உலக வல்லாதிக்க நாடுகளும் ஏதோ ஒரு வகையில் மக்கள்  புரட்சியை அடக்கிவிடுவதே தமிழ் இனத்திற்கான சாபக் கேடு.

இம் முறை தாயகத்தில் என்றும் இல்லாதவாறு சிங்கள் ராஜபச்ச அரசாங்கம் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு விதித்துள்ளது.

இந்தத் தடையை நீக்கக்கோரி தமிழ்க் கட்சிகள் பல ஒன்றிணைந்து சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளன.

இந்த தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.

தியாகி திலீபன் சொல்லிச் சென்ற கருத்துக்களை நாம் கவனித்தில் கொள்வது அவசியம் .

” ஒரு மாபெரும் சதி வலைக்குள் சிக்கி வரும் எமது மக்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும்.” என எச்சரித்தார் எனவே ஒன்றுபட்டிருக்கும் தமிழ் தலைமைகள் இதனை கவனத்தில் கொண்டு ஒருமையுடன் இணைந்து எம் மக்களை விடுவிக்க வேண்டும்.

“என் அன்புத்தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!” என தியாகி திலீபன் வேண்டி நின்றார். எனவே, எம் மக்களே! விழிப்புடன் இருந்து வீறு நடை போடுங்கள்.

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…