புதுவை ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் போராட்டம்

332 0

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்காததை கண்டித்து புதுவை ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு கடந்த 21 -ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

தேர்வில் புத்தகத்தை பார்த்து ஆன்லைனிலோ அல்லது கல்லூரி தேர்வு அறைகளிலோ வந்து தேர்வு எழுதலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பட்டய பயிற்சி ஆசிரியர் படிப்பு மாணவர்களுக்கான தேர்வும் கடந்த 21 -ந் தேதி தொடங்கியது.

லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் பள்ளி மற்றும் வள்ளலார் அரசு பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுதினர்.

கடந்த 2 நாட்களாக ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் உத்தரவின்படி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கேட்டனர். ஆனால் தேர்வு கண்காணிப்பாளர்கள் அனுமதி வழங்க மறுத்தனர்,

இந்த நிலையில் இன்று தமிழ் மொழி கற்பித்தல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத வெங்கடசுப்பா ரெட்டியார் பள்ளி வளாகத்திற்கு வந்த அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

தேர்வு அறைக்கு செல்லாமல் தேர்வு மைய வளாகத்தில் ஒன்றுகூடி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.